மதுரை: நெல்லை மேலப்புத்தனேரி பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'பாளையங்கோட்டை, அரியகுளம் பகுதியில் மாதா மாளிகை திருமண ஹால் உள்ளது. இந்த அரங்கில் திருமண நிகழ்வுகளும், அரசியல் கட்சியினரின் கூட்டங்களும் நடைபெறும். நெல்லை - தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்த ஹால் அமைந்துள்ள நிலையில், நிகழ்வுகள் நடைபெறும்போது இருபுறங்களிலும் உரிய அனுமதியின்றி ஏராளமான பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிக அளவில் வாகனங்கள் செல்லும். இதன் அருகே பள்ளி, கல்லூரிகளும் அமைந்துள்ளன. அனுமதி இன்றி வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில், அதிகாரிகள் அந்த ஹாலை வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டனர்.
மேலும் திருமண ஹாலுக்கான வாகன நிறுத்த வசதி இல்லாத நிலையில், நிகழ்வுக்கு வருபவர்கள் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களில் திருமண அரங்கின் உரிமையாளர் செய்து வருகிறார்.
எனவே விதிகளை மீறி செயல்பட்டுவரும் மாதா மாளிகை திருமண ஹாலின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'உரிய அனுமதி பெறாமல் மஹால் செயல்படுகிறதா?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மனுதாரர் புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: ஈஷா அறக்கட்டளை மின் தகன மேடை விவகாரம்; நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு!