வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வேலூர் புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்தது கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக, கருகம்புத்தூர் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கமாக பேருந்து மோதியுள்ளது. அதில், பேருந்தின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.
லாரியின் பின்பக்கமாக தனியார் பேருந்து மோதிய விபத்தில், 10 பயணிகளுக்கு படுகாயமும், 10 பயணிகளுக்கு லேசான காயமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த நபர்களை, வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது விபத்தில் காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், தனியார் பேருந்தின் ஓட்டுநர் சங்கரின் (30) நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இவ்விபத்து நிகழ்ந்தது தேசிய நெடுஞ்சாலை என்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தன.
இதையும் படிங்க: ஏமனில் அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் பலி! 140 பேர் மாயம்! என்ன நடந்தது?