ராணிப்பேட்டை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "ராணிப்பேட்டை மாவட்டத்தில் எங்கள் சொந்தக்காரர்கள் உள்ளனர். எத்தனையோ முறை நானும், கேப்டன் விஜயகாந்த்தும் ஆற்காடுக்கு வந்துள்ளோம். இது மிக மிக முக்கியமான தேர்தல். தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கின்ற தேர்தல். ஆட்சி பலம், பண பலம், அதிகார பலம் மற்றும் மத்திய, மாநில பலம் உள்ளவர்களுக்கு இடையே தேர்தல் நடக்கிறது.
2024ல் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். இது மக்கள் விரும்பும் கூட்டணி. 2026க்கு இந்த கூட்டணி அச்சாரமாக இருக்கும். நம்முடைய கூட்டணியைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர், படித்த நல்ல வேட்பாளர். எல்லா மொழிகளும் தெரியும். அவர் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு தர வேண்டும். ஆற்காடு தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ 2 முறை எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். ஆனால் எந்தவித பலனும் இல்லை.
ஆற்காடு பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மற்றும் ஆற்காடு - ஆரணி புறவழிச்சாலை அமைக்கப்படும். அரக்கோணம் தொகுதியில் அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதோடு, கலைக்கல்லூரிகளும் அமைக்கப்படும். இங்குள்ள பாலாறு மாசடைந்து உள்ளது. மேலும், குரோமிய கழிவுகள் அகற்றாமல் இருப்பதால், புற்றுநோய் மற்றும் பலவித நோய்கள் இங்குள்ள மக்களுக்கு வருகிறது. எனவே, குரோமிய கழிவுகளை போர்க்கால அடிப்படையில் விஜயன் வெற்றி பெற்று அகற்றுவார்.
மேலும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை பெற்றுத்தரப்படும். அரக்கோணம் ரயில் முனையம், ஜவுளிப்பூங்கா மற்றும் கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கப்படும். நெசவு தொழில் அதிகம் நிறைந்த இந்த பகுதியில் நெசவும், விவசாயமும் கேள்விக்குறியாக உள்ளது. நெசவு தொழில் நலிவடைந்து, அதன் இயந்திரங்களை உடைத்து விற்பனை செய்து சாப்பிடும் நிலையில் தற்போது நெசவாளர்கள் உள்ளனர்.
அமைச்சர் காந்தி, காந்தி என்ற பெயரை வைத்துக் கொண்டு, காந்தி படம் கொண்ட நோட்டுக்களை நம்பி வாழ்கிறார். ஆட்சி பலம், ரவுடி பலம், அதிகார பலம், காவல்துறை பலம் என அனைத்தும் உள்ளதால், கள்ள ஓட்டு கூட போடுவார்கள். எனவே, எந்த வேலை இருந்தாலும், முதல் ஆளாக சென்று வேட்பாளர் விஜயனுக்கு ஓட்டுப் போடுங்கள்.
ஜெயா, விஜயா என மகத்தான கூட்டணி ஏற்கனவே அமைக்கப்பட்டது. நம்முடைய வேட்பாளர் பெயரும் கேப்டனின் பெயரில் பாதி உள்ளது. இது ராசியான கூட்டணி. அதிமுக நான்கு எழுத்து, தேமுதிக நான்கு எழுத்து, எஸ்.டி.பி.ஐ கட்சி நான்கு எழுத்து, ஜூன் 4ல் வாக்கு எண்ணப்படுகிறது. ஆகவே, நாற்பதும் நமதே. இது மக்களுக்கான கூட்டணி என்பதால், சரித்திரம் படைக்கும் கூட்டணியாக இருக்கும்.
தமிழகத்தில் கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, லாட்டரி சீட்டு, வேலையின்மை ஆகியவை அதிகரித்து உள்ளது. திமுகவினர் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. இது போன்ற கஞ்சா புழக்கத்தைத் தமிழகத்தில் இதுவரை மக்கள் பார்த்ததே இல்லை.
இ.டி.ரெய்டு (ED Raid), இன்கம் டேக்ஸ் ரெய்டு (IT Raid) என அனைத்தும் திமுகவில் தான் நடக்கிறது. தர்மத்தின் பக்கம் தான் தமிழக மக்கள் இருப்பார்கள். நம்முடைய வேட்பாளர் ஏ.எல்.விஜயனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: ஸ்லீப்பர் செல் யார்? சீமானுக்கு அண்ணாமலையின் கேள்வி! - Annamalai Vs Seeman