தேனி: இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரமாக வாக்குகளைச் சேகரிப்பதற்கு வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என கூறும் ஜெயலட்சுமி தேனி நாடாளுமன்றத் தொகுதியில் விளக்கேற்றி சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தன்னை பிரச்சாரம் மேற்கொள்ள விடாமல் சிலர் தடுத்து வருவதாக ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
பேட்டியின்போது பேசிய அவர், "எங்க அம்மா தேனி தொகுதியில் செய்த உதவிகளால்தான் தேனி தொகுதியில் போட்டியிட விரும்பினேன். இரண்டு மாதங்களுக்கு முன்பே தேனிக்கு வருகை தந்து மக்களைச் சந்தித்த போது உங்கள் அம்மா எங்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்கள் அதேபோல் நீங்களும் வரவேண்டும் என பொதுமக்கள் கூறியதால்தான் வந்தேன்.
தேர்தலில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று எங்களுக்குப் பலர் தடங்கல் செய்து வருகின்றனர். தேர்தலில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்க மறுக்கின்றனர். எங்களது கட்சி அலுவலகம், தேர்தல் வாக்கு மையத்தில் இருந்து 240 மீட்டர் தொலைவில் தான் வைத்துள்ளோம். ஆனால், 100 மீட்டருக்குள் இருப்பதாகக் கூறி அலுவலகத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை" என்று புகார்களை முன்வைத்தார்.
இதுமட்டும் அல்லாது, "நான் ஜெயலலிதா மகள் என்று சொல்லி, வாக்கு கேட்டு வருகிறேன். அதன் காரணமாக, நான் வெற்றிபெற்று விடுவேன் என்ற அச்சத்தில் என்னைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடங்கல் செய்து வருகின்றனர்" என குற்றச்சாட்டு தெரிவித்தார்.
மேலும், தொடர்ச்சியாகப் பேசிய ஜெயலட்சுமி, "என்னை வெற்றி பெற வைத்தால் ஜெயலலிதா தொகுதிக்குச் செய்த பல்வேறு திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவேன். மேலும், தொகுதியில் உள்ள அடிப்படைத் தேவைகள் குறித்து பொதுமக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர், அதனையும் செய்து தருவேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ''தாமரை சாப்பிட்டாச்சு.. இரட்டை இலையை மென்னாச்சி.. பலாப்பழம் ஜெயிச்சாச்சு'' - நடிகர் மன்சூர் அலிகான்!