தென்காசி: தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களில் அநேக இடங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, அருவிகளில் நீர் வரத் தொடங்கியதால் மக்கள் அதில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நேற்று பிற்பகல் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, பழைய குற்றாலத்தில் 17 வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 21ஆம் தேதி வரை கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இதனை கருத்தில் கொண்டு குற்றால அருவிகள், அணைப் பகுதிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறை சார்பில் ஆய்வாளர் பிரதீப் குமார் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மெயின் அருவியில் உள்ள தடாகத்தில் பாதுக்காப்புச் சங்கிலி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 30 அடி பள்ளத்தில் இழுத்துப் போட்ட காட்டாற்று வெள்ளம்: குற்றாலத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது எப்படி? - Boy Died In Courtallam Flood