சென்னை: பொதுத் தேர்வினை எழுதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (பிப்.12) தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சென்னை மந்தைவெளியில் உள்ள புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 12-ஆம் வகுப்பிற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையிலும், 11-ம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10-ம் வகுப்பிற்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள், 12-ஆம் வகுப்பிற்கு இன்று முதல் 17ஆம் தேதி வரையிலும், 11-ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடத்திட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறது.
அதன் அடிப்படையில், செய்முறைத் தேர்வினை நடத்துவதற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் 12 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு முதல் சுற்று பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 2-ம் சுற்று பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலும் 2 சுற்றுக்களாக நடைபெறுகிறது.
செய்முறைத் தேர்வினை அரசுத் தேர்வுத்துறை வழங்கி உள்ள வழிகாட்டுதல்படி, எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. சென்னை மாவட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. செய்முறைத்தேர்வு மொத்தம் 20 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட உள்ளது.
அதில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், தட்டச்சு, நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன. 15 மதிப்பெண்கள் செய்முறைக்கும், 5 மதிப்பெண்கள் செய்முறைப் பதிவேட்டினை எழுதுவதற்கும், வருகைப் பதிவேட்டிற்கும் வழங்கப்படும். அக மதிப்பெண்கள் 10 மற்றும் எழுத்துத் தேர்விற்கு 70 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்கள் பொதுத்தேர்வில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் மதிமுக கேட்டுள்ள சீட்கள் எத்தனை? - துரை வைகோ தகவல்