திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, நாலு முக்கு, காக்காச்சி, ஊத்து குதிரைவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மலைக் கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி என்ற தனியார் நிறுவனம் மூலம் தேயிலை உற்பத்தி நடைபெற்று வருகிறது.
99 வருட குத்தகையின் கீழ் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் வரும் 2028ஆம் ஆண்டுடன் ஒப்பந்த காலம் நிறைவு பெறும் நிலையில், அங்குள்ள தொழிலாளர்களை விருப்ப ஓய்வு கொடுத்து நிறுவனம் வெளியேற்றும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வழக்கு தொடர்ந்த சூழலில், மறு உத்தரவு வரும் வரை தொழிலாளர்களை மாஞ்சோலையில் இருந்து காலி செய்ய அறிவுறுத்தக் கூடாது, அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை செய்து கொடுக்க வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் சென்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளைச் சந்தித்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுவரை அரசின் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழ்நாடு அரசே மாஞ்சோலை தோட்ட நிறுவனத்தை எடுத்து நடத்த வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மாஞ்சோலை மக்கள் நல இயக்கம் சார்பில் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், தமமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டு தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாஞ்சோலை மக்கள் இயக்கத்தினர், “95 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாழ்ந்து வந்த மக்கள் இன்று நடுரோட்டில் நிற்கிறார்கள். மாஞ்சோலை மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தராமல் வெளியேற்றப்படுவது கண்டனத்திற்குரியது.
தேயிலை தோட்டத்தை டான்டீ எடுத்து நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் அனைத்து அமைப்பினரும் வலியுறுத்துகிறோம். பல ஆண்டுகளாக தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த மக்களுக்கு நகர்ப்புறங்களில் எந்த வேலையும் செய்ய தெரியாது. ஒரு வார காலத்திற்குள் அரசு எங்கள் விவகாரத்தில் முடிவெடுத்து செவி சாய்க்கவில்லை என்றால், மக்களை திரட்டி பெருந்திறள் மக்கள் நடை பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும்” தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்