மயிலாடுதுறை: சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி 1,000 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை, சீர்காழி அருகே கோவில்பத்து நான்கு வழிச்சாலையில் சீர்காழி போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான லாரி ஒன்றை நிறுத்தி, போலீசார் சோதனை செய்துள்ளனர். இதில், ஒரு டன் எடை கொண்ட வெடி மருந்து உரிய பாதுகாப்பு மற்றும் ஆவணங்கள் இன்றி மிகவும் ஆபத்தான முறையில் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் விசாரணை செய்ததில், லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 40 சாக்கு மூட்டைகளில், 1,000 கிலோ எடையுள்ள வெடி மருந்து இருந்துள்ளது. இதன் பின்னர், வெடி மருந்து ஏற்றி வந்த லாரியை தீ விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக நான்கு வழிச்சாலையில் ஓரம் உள்ள ஒர் வயலில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் படுக்கை சரிந்து சிறுவன் காயமடைந்த விவகாரம்: மதுரை ரயில்வே கோட்டம் விளக்கம்!
மேலும், ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பாண்டிச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு வெடிமருந்து ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது. உரிய ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிமருந்து எடுத்து வந்ததால் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு டன் எடை கொண்ட வெடி மருந்தை எளிதாக, அலட்சியமாக எடுத்துச் சென்று வெடித்துச் சிதறினால் பெரும் சேதம் ஏற்படும் என்பது தெரிந்தும், ஏற்றி வந்த லாரியை போலீசார் மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்