தேனி: தமிழகத்தில் ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் அரிசிக்கு கேரளாவில் நல்ல விலை கிடைப்பதால், தேனி மாவட்டத்திலிருந்து டன் கணக்கில் ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று கோடாங்கிபட்டி அருகே உள்ள திருச்செந்தூர் காலனி என்னும் பகுதியில் வீரலட்சுமி நகருக்கு பின்புறம் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் உள்ள குடோனில் டன் கணக்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பழனிச்செட்டிபட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த குடோனை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தார்ப்பாயால் மூடப்பட்டு, தலா 50 கிலோ எடை கொண்ட சுமார் 200 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அந்த அரிசி மூட்டைகளின் மேல் பகுதியில் "கொத்தமல்லி பொடி" என ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு இருந்ததுடன் , கொத்தமல்லி பொடி என அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்களும் முகவரியுடன் ஒட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தனியார் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு தேனியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கில் ஒப்படைக்கப்பட்டு அங்கு ரசீது பெறப்பட்டதுய
இதன் அடிப்படையில் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த கோடாங்கிபட்டியைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரை உணவுப் பொருள் கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட பால்பாண்டி கடந்த பல ஆண்டுகளாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கொத்தமல்லி பொடி என்கிற பெயரில் 50 கிலோ மூட்டைகளில் பேக்கிங் செய்து கேரளாவிற்கு தொடர்ந்து கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதற்கு போலீசார் மட்டும் உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசாரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதில் பால்பாண்டிக்கு ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக அவரது தொழில் எதிரிகள் தற்போது பால்பாண்டியை காட்டிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பால்பாண்டிக்கு மொத்தமாக ரேஷன் அரிசி வழங்கிய விற்பனையாளர்கள் மற்றும் அதிகாரிகள் யார் எனத் தீவிரமாக விசாரணை நடத்தி அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னையிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 70 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் கிளாம்பாக்கத்தில் சிக்கியது எப்படி?