சேலம்: சின்ன திருப்பதி குருக்கள் தெரு பகுதியில் வழக்கறிஞர் ஆஷித்கான் அவரது மனைவி பத்மபிரியா ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்து ஒரு நபர் வெளியே தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவரது மனைவி பத்மபிரியா ஆகிய இருவரும் ரத்தக் காயங்களோடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவரது மனைவியை தாக்கியது செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜோசப் என்கின்ற பாலாஜி என்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க: தென் மாவட்ட பள்ளிகளில் பெருகும் சாதி மோதல்கள்; போர்க்களமாக மாறும் கல்விக் கூடங்கள்.. தீர்வு தான் என்ன?
மூன்று கொலைகள் மற்றும் வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய இந்த நபரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் வழக்கறிஞர் ஆஷித்கான் தான். இதற்கான தொகை கொடுக்கும் விவகாரத்தில், நேரில் சந்தித்த போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஜோசப் கத்தியால் ஆஷித்கானை குத்தியதும், தடுக்க வந்த அவரது மனைவி பத்மபிரியாவையும் குத்தி விட்டு தப்பி ஓடியதும் தெரிய வந்தது.
தலைமறைவான ரவுடி பாலாஜியை கன்னங்குறிச்சி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.