சென்னை: சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண், அந்த பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே கடையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 15 வயது சிறுவன் ஒருவர் வேலை பார்த்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு வயது ஒரு வித்தியாசமாக தெரியவில்லை. அந்த பெண்ணும் சிறுவன் மீது காதல் வயப்படவே இருவரும் தனிமையில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அது மட்டுமின்றி, பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
பெற்றோர் சந்தேகம்: மேலும், கடையில் உடன் வேலை செய்தவர்களுக்கும் இருவரும் பழகிய விதம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் பெற்றோரிடம் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதலில் விசாரித்த போது, சிறுவன் அந்த பெண்ணை அக்கா என்று கூறிய நிலையில், தீவிர விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
கிளாம்பாக்கத்தில் முடிந்த பயணம்: இதையடுத்து பெற்றோர் சுதாரித்துக் கொண்டு இருவரையும் கண்காணிக்க ஆரம்பித்தபோது இருவரும் ஒன்றாக சுற்றித் திரிவதை கண்டுபிடித்தனர். அந்தப் பெண்ணை சிறுவனின் பெற்றோர் கண்டித்த நிலையில், இருவரும் தங்களது காதலை விட்டுவிட மனமில்லாமல் தொடர்ந்து பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் சிறுவனை அழைத்துக் கொண்டு வெளியூர் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தபோது, அவரது பெற்றோர் கிளாம்பாக்கத்திற்கு வந்து இருவரையும் மடக்கி தங்கள் மகனை மீட்டனர்.
ஆனால், அந்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க: கல்யாண ராணி சத்யா புதுச்சேரியில் கைது.. 12 ஆண்களை ஏமாற்றி பணம் பறித்தது அம்பலம்!