வேலூர்: அங்கன்வாடியில் பார் போல் செட் அமைத்து சினிமா காட்சியை ரீ கிரியேட் செய்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக திமுக ஒன்றிய குழு தலைவரின் மகன் மீது காவல் நிலையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சத்துவாச்சாரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் அலமேலுமங்காபுரம் அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. தற்போது, அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த அங்கன்வாடி மையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், மதுகூடமாக மாற்றி பார் போல் செட் அமைத்துள்ளனர்.
அதில், பகத் பாசிலின் "ஆவேசம்"படத்தில் வரும் "இலுமினாட்டி" பாடல் காட்சிகளை ரீ கிரியேஷன் (Recreation) செய்தும், மது குடித்து, புகைபிடித்து, ரவுடிகளோடு கும்மாளம் அடிப்பது போன்ற காட்சிகளை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விசாரித்த நிலையில், இதனை முன்னின்று செய்தவர் வேலூர் திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் என்பவரின் மகன் சரண் என தெரியவந்துள்ளது. இது தொடர்பான செய்தி பல்வேறு ஊடகங்ளில் வெளியான நிலையில், அரசு கட்டிடத்தை தவறாக பயன்படுத்தி, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், வீடியோ வெளியிட்ட திமுக ஒன்றிய குழு தலைவரின் மகன் மீது, அரசு இடத்தில் அத்துமீறியது உட்பட 3 பிரிவுகளின் கீழ் சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் கோர விபத்து: பைகா பழங்குடியின பெண்கள் 17 பேர் பலி! - Kawardha Accident Update