சேலம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் எதிரொலியாக, சேலம் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படும் இடங்களில் கடந்த மூன்று நாட்களாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், ஏற்காடு ஆய்வாளர் நாகராஜ் மற்றும் மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் மலைக் கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஏற்காடு வனப்பகுதிகளில் உள்ள 70 கிராமங்களிலும், சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தப்பட்டது.
ஒவ்வொரு கிராமமாக போலீசார் சென்று சந்தேகப்படும் நபர்களின் வீடுகளிலும், பழைய சாராய வியாபாரிகளின் வீடுகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், ஆற்று ஓடைகள் மற்றும் வனப்பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுகிறதா என்றும் போலீசார் கண்காணித்தனர். இந்த தேடுதல் பணி நேற்று முன்தினம் விடிய விடிய நடைபெற்றது. ஆனால் இப்பகுதியில் சாராயம் விற்பனை எதுவும் நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
அதேபோல கல்வராயன் மலையில் உள்ள கரியகோவில் காவல் எல்லைக்கு உட்பட்ட குன்னூர் மலைக் கிராமத்தில் நேற்று முன்தினம் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த தேவராஜன் (34) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து 25 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கரியகோவில் புதூரைச் சேர்ந்த சாராய வியாபாரி பழனிசாமி (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சதீஷ்குமார் தலைமையில், தனிப்படை போலீசார் நேற்று காலை கல்வராயன் மலைப்பகுதியில் மீண்டும் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். சாராயம் காய்ச்சுபவர் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாராய குற்ற வழக்குகளில் உள்ளவர்கள் சாராயம் கடத்துபவர்கள் மற்றும் கல்வராயன் மலைப்பகுதியிலிருந்து சாராயம் கொண்டு வந்து விற்பனை செய்பவர்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்து மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் யார் என பட்டியல் தயார் செய்து அவர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சாராய வியாபாரிகள் நடமாட்டம் குறித்த விவரங்களை ஆத்தூர் மதுவிலக்கு போலீசாரிடம் பெற்றுக்கொண்ட சிபிசிஐடி போலீசார் அதன் அடிப்படையில் ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த செல்லம் என்பவரது மகன் சுரேஷ் என்பவரை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், பல சாராய வியாபாரிகளை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: " சரக்கு குடிச்சான் செத்துட்டான்" - உ.பி.யை சேர்ந்த வாலிபரின் மரணம் குறித்து முதலாளி வேதனை! - kallakurichi illicit liquor death