சென்னை: சென்னை பெரம்பூரில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு, பிறகு பல்வேறு ரவுடிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர். அதேபோல், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் உட்பட பல்வேறு என்கவுண்டர் சம்பவங்களும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே போலீசாரால் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் நடைபெற்ற என்கவுண்டர்கள் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து, அதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஆணையம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற என்கவுண்டர்களில் தொடர்புடைய காவல்துறை ஆய்வாளர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் ஆஜராகினர்.
அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம், பிரபல ரவுடியான காக்காதோப்பு பாலாஜி மற்றும் சீசிங் ராஜா, புதுக்கோட்டையில் துரைசாமி என நடைபெற்ற என்கவுண்டர் சம்பவங்களில், தொடர்புடைய காவல் ஆய்வாளர்கள், விசாரணை அதிகாரிகள் உள்ளிட்டோர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆணையத் தலைவர் நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் ஆஜராகி ஏன் என்கவுண்டர் நடைபெற்றது? தற்காப்புக்காக நடைபெற்றதா? என விளக்கமளித்துள்ளனர். அதனைப் பதிவு செய்து கொண்ட மனித உரிமைகள் ஆணையம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்