சென்னை: பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 11 நபர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்துவிட்டு ஆயுதங்களை மாதவரம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்ற நபரை இன்று (ஜூலை 14) அதிகாலை போலீசார் மாதவரம் பகுதிக்கு அழைத்துச் சென்றபோது அவர் போலீசை தாக்க முயன்றதாகவும் இதனால் பாதுகாப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரவுடி திருவேங்கடத்தை இரண்டு ரவுண்டுகள் போலீசார் சுட்டதாகவும், அதில் அவரது வலதுகை தோள்பட்டை, நெஞ்சில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அங்கே உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நபர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்திலும், அவர்கள் ஆயுதங்கள் பதுக்க வைத்திருந்த இடத்திலும் காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
போலீசார் எத்தனை ரவுண்டுகள் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர்?, ரவுடி என்ன மாதிரியான ஆயுதங்களால் போலீசாரை தாக்க முயன்றார்?, எந்த இடத்தில் ஆயுதங்களை பதுக்கி வைத்து இருந்தார்?, என்னென்ன ஆயுதங்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன?, சில நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அங்கு எவ்வளவு நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன?, வேறு எங்காவது நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா? உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த விசாரணை அறிக்கையை மாஜிஸ்திரேட்டிடம் வழங்குவார்கள். அதன்பிறகு அதில் உள்ள விவரங்களில் அடிப்படையில், மாஜிஸ்திரேட் உத்தரவுவிட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் உடலை நேரடியாக மாஜிஸ்திரேட் ஆய்வு செய்து, அதன் பிறகு உடற்கூறு ஆய்வுகள் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே திருவேங்கடம் மீது மூன்று கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தென்னரசு கொலையில் இவர் முக்கிய குற்றவாளியாக இருந்ததும், கடந்த ஆண்டு சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பராக திருவேங்கடம் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்வதற்கு முன்பு ஆயுதங்கள் திருவேங்கடம் மூலமாகவே பதுக்கி வைக்கப்பட்டு, கொலை நடந்த அன்று ஆயுதங்கள் இவர் மூலமாகவே எடுத்துவரப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாஜிஸ்திரேட் உத்தரவுக்கு பிறகு திருவேங்கடத்தின் உடல், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுண்டர்.. சென்னைையில் அதிகாலை நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்! - In Madhavaram