கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே 9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்து மருத்துவமனயைில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அட்கோ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் செல்லும் வாகனங்கள் நின்று நிதானமாக செல்கிறது. இந்நிலையில், இன்று மதியம் சுமார் 3 மணியளவில் சானமாவு வனப்பகுதி வழியாக கிருஷ்ணகிரிக்கு வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளது.
அப்போது, ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி கிரானைட் ஏற்றிச் சென்ற லாரி கட்டுபாட்டை இழந்து முன்னாள் சென்ற 4 கார்கள், 3 லாரிகள் மற்றும் ஒரு அரசுப் பேருந்து மீது அடுத்தடுத்து மோதியுள்ளது. இதில் 2 கார்கள் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் பெங்களூரிலிருந்து - கோவைக்கு ஒரே காரில் வந்த கோவையைச் சேர்ந்த ஆயில் மில் தொழிலதிபர் வெங்கடேஷ் (33), அரவிந்த் (30), தஞ்சாவூரைச் சேர்ந்த துரை (24), பழனியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (36), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வேல்விழி (67) மற்றும் இவரது மகன் பூபேஷ் (35) உள்ளிட்ட 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் 2 பேர் லேசான காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அட்கோ போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இதில் கார் ஓட்டுநர் ரவி என்பவர் உயிரிழந்துள்ளார். வேல்விழி மற்றும் துரை ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்தால் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோவையில் மேம்பாலப் பணிக்கான பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு; விரைந்து நடைபெறும் தடுப்புப் பணிகள்!