சென்னை: திருமணத்தை தாண்டிய உறவு விவகாரத்தில், கணவரை மனைவியின் ஆண் நண்பர் கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 3வது செக்டாரைச் சேர்ந்தவர் மைக்கேல் துரைபாண்டியன் (52). இவரது மனைவி பொன்மாலா. பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவர், நேற்று முன்தினம் இவரது பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் மர்மமான முறையில் ரத்தக் காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், ஏற்கனவே துரைபாண்டியன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினர்.
இதில், துரைபாண்டியன் மனைவி பொன்மாலாவுக்கும், அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான வெங்கடேசன் (36) என்பவருக்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பொன்மாலாவும், வெங்கடேசனும் தனிமையில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதனைக் கண்ட துரைபாண்டியன், மனைவியைக் கண்டித்துள்ளார். அப்போது துரைப்பாண்டியன் மற்றும் வெங்கடேசன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் துரைப்பாண்டியனை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, துரைபாண்டியனை கொலை செய்த வெங்கடேசன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், கோயம்பேடு மார்கெட்டில் பதுங்கி இருந்த வெங்கடேசனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: தேனி ஸ்ட்ராங் ரூமில் அத்துமீறி நுழைந்ததாக கல்லூரி முன்னாள் ஊழியர் கைது! - Theni Strong Room Issue