காட்பாடி: வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில் காவல்துறையினர் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். காட்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ஆய்வாளர் ஆனந்தன் உதவி ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய டிஎஸ்பி பழனி, காட்பாடியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை மற்றும் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இதைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் குற்றங்களை தடுப்பதிலும் பொதுமக்களுக்கு பங்கு உள்ளது. தங்கள் பகுதியில் புதிதாக நடமாடும் நபர்கள் குறித்தும், சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டால் அவர்களை பற்றி போலீசார் தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், குற்றங்கள் உங்கள் பகுதியில் தடுக்க சிசிடிவி கேமராகள் பொருத்த வேண்டும் என்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என கூறினார்.
அத்துடன், பெற்றோர்கள் குழந்தைகளிடம் செல்போன் பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும். பெற்றோர்கள் செல்போன் கேட்கும்போது, குழந்தைகள் கொடுக்க மறுத்தால் அவர்கள் தவறான செயலில் ஈடுபடுவதாக கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்