கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை வேளையில் போலீசாரின் அனுமதியின்றி இளைஞர்கள் சிலர் ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாட்டுவண்டி ஒன்று எதிர் திசையில் வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தன்னார்வலர்கள் சிலர் இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க : சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவலா? - காஞ்சிபுரம் போலீஸ் பரபரப்பு விளக்கம்!
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாட்டு வண்டியை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த மாடுகளின் நிலை என்னவானது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்