சென்னை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மோதிபின்டு மற்றும் கார்பி அகர்வால் தம்பதியினர். இவர்கள் நேற்று முன் தினம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 12வது பிளாட்பாரத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர் அருகே தங்களது 2 வயது குழந்தையுடன் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அக்குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
அக்கம்பக்கத்தில் எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால், உடனடியாக குழந்தையைக் காணவில்லை என ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்தனர்.
அதில், மர்ம நபர்கள் இருவர் அக்குழந்தையை தூக்கி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அவர்களை பின்தொடர்ந்து சென்ற போலீசார், மூர் மார்க்கெட் அருகே இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும், குழந்தை கடத்தப்பட்டு 2 இரண்டு மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்திக்கொண்டு சென்ற நபர்கள், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்த துர்கா(19) மற்றும் சித்தராமையா(18) எனத் தெரியவந்தது. தற்போது அவர்கள் இருவரும் குழந்தையை ஆந்திராவிற்கு கடத்திச் சென்று விற்க முயற்சி செய்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இதுபோன்று குழந்தை கடத்தும் சம்பவம் அதிகளவில் நிகழ்ந்து வருவதால், பயணிகள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாகவும், கவனமாகவும் பார்த்துக் கொள்ளும்படி ரயில்வே போலீசார் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.