திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அவரைக் காணவில்லை என மகன் புகார் அளித்த மறுநாளே, திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு எழுதியதாக வெளியான கடிதங்களில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கேவி.தங்கபாலு, எம்எல்ஏ ரூபி மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களால் தனக்கு ஆபத்து இருப்பதாக எழுதி இருந்தார்.
எனவே, ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் இடம் பெற்ற அனைத்து நபர்களுக்கும் போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர். இந்த நிலையில், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனிடம், தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள அரசு மரைன் கல்லூரியில் வைத்து தனிப்பட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
குறிப்பாக, ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில், தான் 70 லட்சம் ரூபாய் ரூபி மனோகரனுக்கு கொடுத்ததாகவும், அந்த பணத்தை அவர் திரும்பத் தரவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கே.வி.தங்கபாலு கூறியதன் பேரில் 11 லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும்,
அந்த பணத்தை ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளும்படி தங்க பாலு கூறியதாகவும், ஆனால் அந்த பணத்தையும் திரும்பத் தரவில்லை எனக் குறிப்பிட்டு இருந்தார். எனவே, உண்மையாகவே ஜெயக்குமாருக்கு மனோகரன் பணம் கொடுக்க வேண்டியது இருக்கிறதா என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, ஏற்கனவே கட்சி ரீதியாக இருவருக்கும் இடையே பிளவு இருந்ததாகப் பேசப்பட்டதால், ஜெயக்குமார் மரணத்தின் பின்னணியில் அரசியல் பகை இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் பல்வேறு கேள்விகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
போலீசார் முன்வைத்த சில கேள்விகளுக்கு ரூபி மனோகரன் சரியான பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. ஆனால், ஜெயக்குமாருக்கும் எனக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இல்லை என்பதை மட்டும் ஆணித்தரமாக போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கடும் வறட்சி எதிரொலி: விலங்குகளை பாதுகாக்க தொட்டியில் தண்ணீர்.. குடித்து மகிழ்ந்த யானைகள் வீடியோ!