கோயம்புத்தூர்: கோவையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் 63-வது காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. மேலும், இந்த விளையாட்டுப் போட்டிகள் நேற்று (பிப்.16) மாலை நிறைவடைந்ததை முன்னிட்டு, வெற்றி பெற்ற நபர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
இந்தப் போட்டியில் மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம், வடக்கு மண்டலம், சென்னை பெருநகர காவல் ஆணையரகம், ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம், ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு ஆகிய 9 அணிகளின் சார்பில் காவல்துறை வீரர்கள், வீராங்கனைகள் என மொத்தம் 743 பேர் கலந்து கொண்டனர்.
அதில் பொதுவான பிரிவு, அமைச்சுப் பணியாளர்கள் 30 வயதுக்கு உட்பட்டோர், 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டோர், 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டோர், 50 முதல் 60 வயதுக்கு உட்பட்டோர், படைவீரர் காவல் துறையினர் பிரிவில் 35 முதல் 39 வயதுக்கு உட்பட்டோர், 40 முதல் 44 வயதுக்கு உட்பட்டோர், 45 முதல் 49 வயதுக்கு உட்பட்டோர், 50 முதல் 54 வயதுக்கு உட்பட்டோர், 55 முதல் 60 வயதுக்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
பொதுப் பிரிவினரில் ஆண்களுக்கு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் 1,500 மீட்டர் ஒட்டம், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளும், பெண்களுக்கு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 1,500 மீட்டர் ஓட்டம், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. அதேபோல், வயது பிரிவுகள் வாரியாக ஓட்டப்பந்தயப் போட்டிகளும், குண்டு எறிதல் போட்டி அனைத்து பிரிவினருக்கும் நடத்தப்பட்டன.
பதக்கங்களை வழங்கிய பின் பேசிய சங்கர் ஜிவால், "தமிழ்நாடு காவல்துறையில் பணிகள் அதிகமாக இருப்பதால், விளையாட்டுக்கு போதிய பயிற்சி கிடைக்காமல் உள்ளது. ஆனால், இடைப்பட்ட நேரத்தில் காவலர்கள் விளையாட்டில் கலந்து கொண்டது மிகப்பெரிய விஷயம். இந்த விளையாட்டுப் போட்டிகளில் புதிய சாதனையை சிலர் படைத்துள்ளனர். அதாவது, 14 புதிய சாதனைகளில், 12 பெண்கள் சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்க்கையில் உயர்ந்து செல்வதை நோக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் நிபுணர்கள் பயிற்சி இல்லை, அதில் ஒரு இடைவெளியாக உள்ளது. முறையான பயிற்சி இருந்தால், தேசிய அளவில் நமது காவல்துறை பல பதக்கங்களை பெறுவார்கள். கடந்தாண்டு புதிய பயிற்சிக்காக பெங்களூர், பட்டியாலாவில் அரசு செலவில் பயிற்சி எடுக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வண்ணங்களில் காலணி உள்ளிட்ட அம்சங்களை நமது நிதியில் இருந்து கொடுக்கலாம்.
விளையாட்டு உபகரணங்கள் தரமுள்ளவற்றை தயார் செய்யலாம். பெரு நகரங்களில் மட்டுமே நடந்த நிலையில், முதல் முறை கேலோ இந்தியா விளையாட்டுகள் கோவை, மதுரை போன்ற நகரங்களில் நடந்தது. மேலும், முதல் முறையாக தமிழ்நாட்டில் குதிரை பந்தயத்தை தமிழ்நாடு காவல்துறை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்தார்.
இதனிடையே, காவல் துறையினருக்கான போட்டிகள் நடைபெற்ற நேரு விளையாட்டு அரங்கில் உள்ள ஆண்கள் கழிப்பறையில், ஏராளமான ஊக்க மருந்து குப்பிகளும், ஊசிகளும் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போட்டியில் கலந்து கொண்ட காவலர்கள் கூறுகையில், "ஊக்க மருந்து பயன்படுத்தி, போட்டிகளில் வெற்றி பெற்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காவல்துறையில் பணியாற்றும் காவலர்களே இது போன்று ஊக்க மருந்துகள் பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாங்கள் மிகவும் கடின பயிற்சி எடுத்து போட்டிகளில் கலந்து கொண்டோம். ஆனால், ஒரு சிலர் இவ்வாறு தவறான வழியை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்கள். ஆகையால், இது குறித்து உயர் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தியவர்கள் யார் எனக் கண்டறிந்து, அவர்களின் பதக்கங்களை திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை துறைமுகம் வந்தடைந்த ஐஎன்எஸ் போர்க்கப்பல்!