சென்னை: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் நேற்றிரவு 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தற்போது, அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், பல்வேறு அமைப்பினர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல்.
— Dr S RAMADOSS (@drramadoss) July 5, 2024
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங்… pic.twitter.com/isUNUfKHbu
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் தமிழகத்தில் வளர்ந்து வந்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர். அம்பேத்கர், கன்ஷிராம் ஆகியோரின் கொள்கைகளை நன்கு கற்றுத் தேர்ந்தவர்.
பட்டியலின மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான அரசியலை மேற்கொண்டவர். என் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் கொண்டவர். அவரது மறைவு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.