கோயம்புத்தூர்: கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் My V3 விளம்பர நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், "மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுவருவதுடன் காவல்துறையினரையும் மிரட்டும் உரிமையாளர் என கூறிக்கொள்ளும் சக்தி ஆனந்த் மட்டுமல்லாது அந்த நிறுவனத்தின் பின்புலமாகச் செயல்படும் குருஜி என்கிற விஜயராகவன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு அவர்கள் செலுத்திய பணம் கிடைக்க வேண்டியும் அந்த நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த புகார் குறித்து, கோவை பாமக மாவட்டச் செயலாளர் கோவை ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், கடந்த 5 மாதங்களாக மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வரும் My V3 விளம்பர நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி சட்டமன்றத்தில் கவணஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "இந்த My V3 விளம்பர நிறுவனத்தின் மீது புகாரளித்த கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி மீது சமுக வலைத்தளங்களில் தனி நபர் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆகவே, உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இதற்கு முன்னதாக கோவை மாவட்ட பாமக கட்சியினர், My V3 விளம்பர நிறுவனத்தின் நிதி மோசடி மட்டுமல்லாது மணல் கொள்ளை, செங்கல் சூளை மணல் கொள்ளை, கனிம வள கொள்ளை போன்ற பல மோசடிகள் குறித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளது.
அதே போல, My V3 விளம்பர நிறுவனத்தின் விவகாரத்திலும் மாவட்டச் செயலாளர் அசோக் ஸ்ரீநிதி-யின் பின்னால் கண்டிப்பாக பாமக நிற்கும் எனவும், My V3 விளம்பர நிறுவனம் மக்களை மோசடி செய்வதில் ஆரம்பநிலையில் இருக்கும்போதே காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் சட்டப்பேரவை வீடியோ வெளியிட்ட விவகாரம்; காங்கிரஸ் தரப்பில் அவை உரிமை மீறல் தீர்மானம்!