சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டு நாள்கள் நடந்தது. இதில் இரண்டாம் நாளான நேற்றைய தினத்தின் கேள்வி நேரத்தில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்ப, அதற்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது, துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே மணி, “ஜாதி வாரி கணக்கெடுப்பை இந்த அரசு நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், "தற்போதைய தரவுகளின் அடிப்படையில் தான், உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுத்தால் மட்டுமே இந்த உள் ஒதுக்கீட்டை வழங்க முடியும். எனவே, இந்த கணக்கெடுப்பை எடுக்க மத்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்த வேண்டும்," என்றார்.
அப்போது, குறுக்கிட்டு பேசிய ஜி.கே.மணி, "சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் இஸ்லாமியர்கள், அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதை போலவே வன்னியர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: "வேங்கை வயலா எப்போது? அது பழைய விஷயம் ரொம்ப நாள் ஆச்சே" - இரா.முத்தரசன் ரியாக்சன்!
இதையடுத்து, பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், "மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கொடுத்ததும், அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீட்டை கொடுத்ததும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அந்த இடஒதுக்கீடு இன்றும் சரியாக உள்ளதால்தான், அதை யாராலும் நீதிமன்றத்திற்கு சென்று தடுக்க முடியவில்லை. ஆனால், உங்கள் கூட்டணியில் தேர்தல் ஸ்டண்ட்டுக்காக இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதனால் தான் உங்களுக்கு அதில் இவ்வளவு பிரச்னை வருகிறது," என்றார்.
இதனைத் தொடர்ந்து, பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "10.5 சதவீத இட ஒதுக்கீடுச் சட்டத்தை அதிமுக ஆட்சியில் முறையாக கொண்டு வரவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான், இதை செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு, உச்ச நீதிமன்றத்திற்கு சென்று இதற்கு தடை வாங்கப்பட்டது. இது யாருடைய தவறு," என்றார். ஆனால், முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்காத வகையில் இருப்பதாகக் கூறி பாமக உறுப்பினர்கள் சிறிது நேரம் அமளியில் ஈடுபட்டனர்.