சென்னை: தமிழ்நாட்டில் திடீர் திருப்பமாக வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi) அதிமுக கூட்டணியில் இடம் பெறவுள்ளதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் தைலாபுரத்திற்கு நேரில் சென்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
நேற்று முன்தினம் வரை அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறவுள்ளதாக பேசப்பட்ட நிலையில், நேற்று(திங்கட்கிழமை) இரவு, பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதை உறுதி செய்தது. அதோடு இன்று சேலத்தில் நடைபெறவுள்ள பாஜக மாநாட்டில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இதனிடையே, இன்று 8 மணிக்கு பாஜக - பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கையெழுத்தானது அதில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல்
1.தருமபுரி
2.கடலூர்
3.விழுப்புரம் (தனி)
4.சிதம்பரம் (தனி)
5.ஆரணி
6.அரக்கோணம்
7.ஸ்ரீபெரும்புத்தூர்
8.சேலம்
9.மத்திய சென்னை
10.விருதுநகர் (அ) திண்டுக்கல்
இதில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரு தனித் தொகுதிகளில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பாமக நேரடியாக எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.