மயிலாடுதுறை: தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப்.19) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன்படி, தமிழ்நாட்டில் 5 மணி நிலவரப்படி 62.02 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அந்த வகையில், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவானது நடைபெற்ற நிலையில், மயிலாடுதுறை மகாதானத் தெருவில் 143வது வாக்குச்சாவடி மற்றும் 144வது வாக்குச்சாவடியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மகாதானத் தெருவில் உள்ள 143வது மற்றும் 144வது வாக்குச்சாவடியில் கடந்த தேர்தலின் போது 1189 வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில், இம்முறை வாக்காளர் பட்டியலில் 644 பேர் பெயர்கள் மட்டுமே இருந்து உள்ளதாகவும், 541 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் வாக்குச்சாவடி முன்பு 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திட்டமிட்டு தங்கள் பெயர்களை நீக்கப்பட்டுள்ளதாகவும், கைகளில் வாக்காளர் அடையாள அட்டையை ஏந்தி தங்களுக்கு வாக்குரிமை வழங்க கோரியும் முழக்கமிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பொது மக்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் வாக்குகள் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாகவும், மயிலாடுதுறை நகரில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்த்து தேர்தலை நடத்த கோரியும், வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வாக்குப்பதிவு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
இதன் காரணமாக அப்பகுதியில் மத்திய ரிசர்வு படை மற்றம் தமிழக கேரள போலீசார் என 80க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து துணை தேர்தல் நடத்தும் அலுவலர் யுரேகா, கூடுதல் ஆட்சியர் சபீர்ஆலம் பேச்சவார்த்தை நடத்தினர்.
இதனால் சென்னையில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வாக்களிக்க வந்த வாக்காளர்கள், பெயர்கள் இல்லாததல் ஜனநாயக கடமையாற்ற முடியாமல் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: "ஒற்றை வாக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என யோசிக்காதீர்கள்" : நடிகர் விஷால் ட்வீட்.! - Tamil Nadu Lok Sabha Election 2024