விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக காணை, ஒட்டன்காடுவெட்டி, கருங்காலிப்பட்டு, கல்பட்டு, மாம்பழப்பட்டு, பொன்னான்குப்பம் ஆகிய ஆறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, பின்னர் புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதே போன்று விக்கிரவாண்டி மையப் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தேன்கூடு இருந்ததால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேன்கூட்டை கலைத்ததை தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவானது தற்போது நடைபெற்று வருகிறது. இதேபோன்று குறிப்பிடத்தக்க சில வாக்குச்சாவடி மையங்களில் மின்சார நிறுத்தம் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ள 230 மற்றும் 231 ஆகிய வாக்குச்சாவடிகளில் வெளியூர் ஆட்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், கடந்த 8ஆம் தேதியுடன் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருந்து வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்த பின்னரும், வெளியூர் நபர்களின் நடமாட்டம் மிகுந்து காணப்படுவதாகவும் புகார் எழுந்தது.
அதேபோன்று, இன்று காலை 23வது வாக்குச்சாவடி மையத்தில் முதியவர் ஒருவர் வாக்களிக்க வரும் போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், முதியவருக்கு எவ்வாறு வாக்கு செலுத்துவது என்பதைக் கூறுவது போன்று அவரே வாக்கைச் செலுத்தியதாகவும், இதனை தட்டிக்கேட்ட பாமகவினரை ஒருமையில் பேசுவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், காலை 7 மணி முதல் 11 மணி வரை அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவில் தற்போது சிறு சலசலப்புகள் ஏற்படுவதாக பாமகவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செயல்படும் தேர்தல் அதிகாரிகள் அனைவரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் ஏதோ கண்துடைப்பு போன்று உள்ளது, எனவே மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என பாமகவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக, பாமக வேட்பாளர் வாக்களிப்பு.. வாக்குச்சாவடியில் தேனீக்களால் தொல்லை! - VIKRAVANDI BY ELECTION