கன்னியாகுமரி: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து வரும் பிரதமர் மோடி, தனது தேர்தல் பரப்புரையையும் தொடங்கியுள்ளார். அந்தவகையில், இன்று கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், பாஜக கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், எனது அன்பான தமிழ் சகோதர சகோதரிகளே! வணக்கம் என பேசத் தொடங்கினார். 1992-ல் ஏக்தா யாத்திரையைக் கன்னியாகுமரியில் தான் தொடங்கினேன். இன்று கன்னியாகுமரியிலிருந்து ஒரு பேரலை கிளம்பியுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுகவின் வெற்றி என்ற கர்வம் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியது. நாட்டை துண்டாட எண்ணியவர்களைக் காஷ்மீர் மக்கள் தூக்கி வீசினர். அதேபோல, திமுக- காங்கிரஸின் இந்தியா கூட்டணியையும் கண்டிப்பாகத் தூக்கி எரியப்படும். இக்கூட்டணியின் வெற்றி என்ற தலைக்கனம் முற்றிலுமாக துடைத்தெறியப்படும்.
திமுக, காங்கிரஸ் கூட்டணியால் எந்த வளர்ச்சியும் இல்லை. அவர்களது கொள்கையே அரசியலுக்கு வந்து கொள்ளை அடிப்பதே ஆகும் எனக் குற்றம்சாட்டியுள்ளார். 2ஜி ஊழலில் திமுக பெரும்பங்கு வகிப்பதாகவும், இந்தியா கூட்டணியில் நிலக்கரி ஊழல், ரஃபேல் விமானம் ஊழல் என சொல்லிக்கொண்டே போகலாம் எனவும் அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை, எந்த பாதிப்பும் இல்லாமல் மத்திய அரசு மீட்டுக் கொண்டு வந்தது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எதற்காகப் போகவேண்டும்? இது யார் செய்த குற்றம் என தமிழ்நாடு மீனவர்கள் சிந்திக்க வேண்டும். இதற்குக் காரணம் யார்? என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்றார்.
வ.உ.சி துறைமுகம் தற்போது மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மத்திய அரசு, பெண்களுக்கான அரசு; பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசு. திமுக - காங்கிரஸ் ஆகியவை பெண்களுக்கு விரோதியாகச் செயல்படுகின்றன. ஆனால், பாஜக அப்படியில்லை; பெண்களை பாஜக மதிக்கிறது.
பெண்களுக்காக பாஜக அரசு இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இனிமேல் 'நமோ' ஆப்பில் நான் சொல்ல நினைப்பதை உங்களுக்குப் புரிய வைக்கலாம். நான் அடிக்கடி தமிழ்நாடு வந்தாலும், உங்களோடு தமிழில் என்னால் தெளிவாகப் பேச முடியவில்லை என்பதை எண்ணி வருந்துகிறேன். இனி இதற்காக நான் பேசியவற்றை நமோ ஆப்பில் தமிழில் கேட்கலாம்.
நான், நமோ இன் தமிழ் என்ற எக்ஸ் பக்கத்தில் பிரதமரின் பேச்சு தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி பேசிய உரைகள் அப்படியே தமிழில் வரும் வகையில், தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டு உள்ளது. சனாதனத்திற்கு எதிராகப் பேசியவர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது என திமுகவின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் குறித்து மறைமுகமாகப் பிரதமர் மோடி சாடினார்.
பின்னர் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியின் இந்தி பேச்சை, செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழில் மாற்றி வெளியிடப்பட்டு உள்ளது. அதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கேட்பதோடு, பிறரையும் கேட்குமாறு அறிவுறுத்துங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: "திமுகவின் கர்வம் அகற்றப்பட வேண்டும்" - குமரி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு!