மதுரை: மதுரையில் இன்று (பிப்.27) நடைபெற்ற 'வாகனத் தொழிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குதல் – டிஜிட்டல் இயக்கம்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, வாகனத் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, "தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக வாகனத் துறையில், உலக அரங்கில் தமிழ்நாடு தனது திறமையை நிரூபித்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம், மோட்டார் வாகனத் தொழிலிலிருந்து வருகிறது. இது நாட்டின் தற்சார்பில் முக்கிய அங்கமாக உள்ளது.
மோட்டார் வாகனத் தொழிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 45 லட்சத்துக்கும் அதிகமான கார்கள், 2 கோடி இருசக்கர வாகனங்கள், 10 லட்சம் வர்த்தக வாகனங்கள் மற்றும் 8.5 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு வாகனத்திலும் பயன்படுத்தப்படும் 3000 முதல் 4000 பாகங்களின் உற்பத்தி செயல்பாட்டில், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பாகங்களின் உற்பத்திக்கு இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் பெரும்பாலான முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் இந்த நிறுவனங்கள் உள்ளது.
இன்று நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் வலுவான அங்கமாக மாறுவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு, தரம் மற்றும் நீடித்த உழைப்பு அவசியம். சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உள்ளடக்கிய வகையில் 'குறைபாடு இல்லாத உற்பத்திப் பொருட்கள்' என்பது நமது கொள்கையாக இருக்க வேண்டும்.
மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதற்கேற்ப தொழில்முனைவோர் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வாகனங்கள் மற்றும் வாகனப் பாகங்களுக்கான ரூ.26,000 கோடி மதிப்புள்ள உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் வாகன உற்பத்தியுடன் ஹைட்ரஜன் வாகனங்களையும் ஊக்குவிக்கிறது.
இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட வாகன மேம்பாட்டுத் தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுகிறது. நாட்டில் புதிய தொழில்நுட்பங்கள் வளரும்போது, அந்தத் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய முதலீடும் இந்தியாவுக்கு வரும். அந்த வாய்ப்புகளுக்காக, சரியான உத்தியுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
புதிய சரக்குப் போக்குவரத்து கொள்கையாக இருந்தாலும் சரி, சரக்கு மற்றும் சேவை வரியாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் மோட்டார் வாகனத் துறையில் உள்ள சிறு தொழில்களுக்கு உதவியுள்ளன. விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்தை உருவாக்கியதன் மூலம் இந்தியாவில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அரசு ஊக்கத்தை வழங்கியுள்ளது.
பழைய வாகனங்கள் அழிப்புத் தொடர்பான அரசின் கொள்கையை; கப்பல் கட்டமைப்பில் புதுமையான வழிகள் மற்றும் அதன் பாகங்களை மறுசுழற்சி செய்வதற்கான சந்தை; ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்; நெடுஞ்சாலையில் ஓட்டுநர்களின் வசதிக்காக 1,000 மையங்கள் உருவாக்கப்படுவது; நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வது தொடர்பான வாகனத் தொழில் துறையினரின் திட்டங்கள் ஆகியவற்றிற்கு அரசு துணை நிற்கும்" என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: "தமிழகத்தில் கடைசியாக நல்லாட்சி கொடுத்தவர் ஜெயலலிதா! எம்ஜிஆருக்கு எதிரான ஆட்சி நடக்கிறது"- பிரதமர் மோடியின் திட்டம் என்ன?