திருநெல்வேலி: திருநெல்வேலி, கேடிசி நகரைச் சேர்ந்தவர் செல்லப்பா (59). இவரது மனைவி ரெஜிலா, திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். விவசாயம் செய்து வரும் செல்லப்பா, இன்று (மே 1) பாளையங்கோட்டை அடுத்த மேலப்பாட்டத்தில் உள்ள தனது வயலில் விவசாய வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், செல்லப்பாவை நோக்கி ஒரு நாட்டு வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் வெடிகுண்டை அடுத்தடுத்து வீசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இரண்டுமே வெடிக்கவில்லை. அதேநேரம், பெட்ரோல் குண்டு வீசிய போது பாட்டில் உடைந்து வெடித்துச் சிதறி பீங்கான் உரசியதில், செல்லப்பாவுக்கு கை மற்றும் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, செல்லப்பா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த வந்த திருநெல்வேலி தாலுகா போலீசார் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவம் நடந்த மேலப்பாட்டம் வயல் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சம்பவ இடத்தில் நாட்டு வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான அடையாளம் இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அங்கு சணலால் தயார் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பாட்டில் ஒன்று உடைந்து கிடந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்லப்பாவிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், செல்லப்பாவுக்கும், அவரது உறவினருக்கும் இடையே சொத்து பிரச்னை இருப்பதாகவும், அதனால் ஏற்பட்ட பகை காரணமாக இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து செல்லப்பா அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடிகுண்டு வீசிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விருதுநகர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து; 3 பேர் உயிரிழப்பு.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - VIRUDHUNAGAR STONE QUARRY ACCIDENT