சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தின் 23வது பட்டமளிப்பு விழா வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளனர்.
இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில்,"சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக் கழகம் சார்பில் நான்கு ஆட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நான்கு பேரும் பதவி உயர்வு பெற்று விட்டபடியால் இவை காலியாக உள்ளது. ஆட்சிக் குழு உறுப்பினர் பதவி காலியானவர்களை வைத்து பட்டமளிப்பு விழா நடத்துவது சட்டத்திற்கு முரணானது. ஆகவே பணிமூப்பின் அடிப்படையில் புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களை துணை வேந்தர் வரும் திங்கள் கிழமைக்குள் நியமிக்க வேண்டும்.
இதையும்ம் படிங்க: சாம்சங் தொழிலாளர் பிரச்னையை ஊதி பெரிதாக்குவதா? சிஐடியு.க்கு திமுக தொழிற்சங்கம் கடும் கண்டனம்!
இல்லையேல் ஆசிரியர் சங்கம் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எதிராக மாபெரும் சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும்.புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களை துணை வேந்தர் நியமிக்காமல் இருப்பது பல்கலை நிர்வாகத்தை முடக்கும் சர்வாதிகார செயலாகவே கருதப்படும்.
எனவே தமிழக அரசு உடனடியாக புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களை பணி மூப்பின் அடிப்படையில் நியமிக்க உத்திரவிட வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பட்டங்களை அங்கீகரிக்க நடக்கும் சிறப்பு ஆட்சி மன்றக் கூட்டத்தில் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர்களை பங்கு பெறச் செய்ய வேண்டும். இதற்காக நாளைக்குள் புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.