சென்னை: இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை அடுத்த 4 நாள்களில் விலக உள்ளதைத் தொடர்ந்து, தென்னிந்தியப் பகுதிகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசும் நிலையில், தென்னிந்தியப் பகுதிகளில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களுக்கு அடுத்து இரண்டு நாட்களுக்கு அதி கன மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அதிக கன மழை பெய்யும் என்பதால் வேளச்சேரி பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் நான்கு சக்கர வாகனமான கார்களை வேளச்சேரி - பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்தி நிறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: மழை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்; பொதுமக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்..!
கடந்த வருடம் வேளச்சேரி பகுதியில் கனமழை பெய்த போது, குடியிருப்புகள் முழுகும் அளவிற்கு மழைநீர் தேங்கியது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. சென்னையில் இருந்து வெளியேறும் மழை நீர், வேளச்சேரி, பள்ளிக்கரணை வழியாக சதுப்பு நிலம் செல்வதால் அந்த பகுதியில் பெருமளவு பாதிப்பு ஏற்படும்
இதனால் வேளச்சேரி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை வேளச்சேரி பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தின் மேல் நிறுத்தி வைத்துள்ளனர். மேம்பாலத்தின் மேல் ஓரமாக கார்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏதும் ஏற்படுகிறதா? என போக்குவரத்து போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வேளச்சேரி போக்குவரத்து ஆய்வாளர் கதிரவனிடம் கேட்டபோது, "கனமழையால் தங்கள் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி, அதனால் கார் பழுதாகிவிடுமோ என அஞ்சி சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேளச்சேரி பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தில் காரை நிறுத்தி வைத்துள்ளனர்.
மேம்பாலத்தின் சாலை ஓரத்தில் கார் நிறுத்தி வைத்திருப்பதால் போக்குவரத்திற்கு தற்போது வரை எந்தவொரு இடையூறும் ஏற்படவில்லை. ஆனால் மேம்பாலத்தின் மீது நிறுத்த வேண்டாம் வேறு எங்காவது காரை பத்திரமாக நிறுத்திக் கொள்ளுங்கள் என கார் உரிமையாளர்களிடம் போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவுறுத்தியுள்ளோம்.
ஆனால் 10 லட்சம் மதிப்புள்ள காரை மழை நீரில் நிறுத்தி வீணாக்க முடியாது அதற்கு பதிலாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தால் அதை கட்டிக் கொள்கிறோம் என்பதுதான் கார் உரிமையாளர்களின் பதிலாக உள்ளது. இதேபோல் வேறு மேம்பாலத்தின் மீதும் கார் உரிமையாளர்கள் காரை நிறுத்தி வருகின்றனர்" என்று போக்குவரத்து ஆய்வாளர் கதிரவன் கூறினார்.
வாகனங்களுக்கு அபராதம்: வேளச்சேரி மேம்பாலத்தை தொடர்ந்து வேளச்சேரி விஜயநகர் மேம்பாலத்திலும், பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் பொதுமக்கள் கார்களை நிறுத்த தொடங்கியுளள நிலையில், அந்த வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபாரதம் விதித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னையில் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையையொட்டி, சென்னை மாநகர பகுதிகளில் மழை நீரால் அதிகம் பாதிக்கப்படும் வேளச்சேரி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால்வாய் அகலப்படுத்தும் பணிகளை முடித்துவிட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்தும், வேளச்சேரி மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை அச்சத்தில் இருந்து மீளவில்லை. இதனால் வேளச்சேரி, விஜயநகர், பேபி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொகுசு கார்களை மேடான பகுதிகளில் நிறுத்த தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக வேளச்சேரி மேம்பாலத்தின் இருபுறத்திலும் ஏராளமான சொகுசு கார்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.
வானத்தை இங்கு நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும், போக்குவரத்து போலீஸார் கார்களின் உரிமையாளர்கலிடம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், வாகனங்கள் அங்கிருந்து எடுக்கப்படாததால், போக்குவரத்து போலீசார் அந்த வாகனங்களுக்கு தற்போது அபராதம் விதித்து வருகின்றனர்.