தூத்துக்குடி: தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்றத் தொகுதிகளில் இம்மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி நேற்று (புதன்கிழமை) மாலை தூத்துக்குடி அடுத்த குறுக்குசாலை பகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது திறந்தவெளி வாகனத்தில் நின்று பேசிய கனிமொழி, "இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். யார் ஆட்சிக்கு வர போகிறார்கள் என்பதை தாண்டி, நம்முடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு தேர்தல்.
ஏனென்றால் புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும்போது அதில் ஒரு நுழைவுத் தேர்வு கொண்டு வந்து, நம் பிள்ளைகள் படிக்கக்கூடாது, நல்ல வேலைக்கு வரக்கூடாது, அவர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் பாஜக இவ்வாறு செயல்படுகின்றது.
நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கீடு இருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு காப்பாற்றப்பட்டும் நம் பிள்ளைகள் படித்து நல்ல வேலைகளுக்கு போக வேண்டும் என்றால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் வரும் தேர்தலில் நாம் பாஜகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு "இந்தியா" கூட்டணி (INDIA Alliance) ஆட்சியில் அமர்த்த வேண்டும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பாக ஆட்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது குறித்து பேசுகையில், "பத்திரிகைத்துறை நண்பர்களிடம் கேட்டால் தெரியும் அவர்களுக்கு இருக்கும் நெருக்கடி. மோடியை எதிர்த்து ஏதாவது எழுதினால் அவர்களின் முதலாளி வீட்டிற்கு ரெய்டு.
அதையும் மீறி எழுதினால் அவர்கள் வேலையை விட்டு நீக்கிப்படுகின்றனர். அவர்களை கைது செய்தி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இன்னும் கௌரி லங்கேஷ் போன்ற சில பத்திரிகையாளர்கள் பாஜக ஆட்சியில் கொலை செய்யப்பட்டுள்ளனர்" எனக் கூறினார்.
மேலும், "பாஜக அரசு எதிர்க்கட்சி தலைவர்களை பல்வேறு விதமாக மிரட்டி வருகிறார். இரண்டு முதலமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகாலமாக டெல்லி துணை முதலமைச்சர் சிறையில் உள்ளார். பெரிய கட்சிகளின் நிலையே இப்படி என்றால், சாமானிய மக்கள் நிலை குறித்து சிந்தித்து பார்க்கவேண்டும்.
ஒரு வருடமாக விவசாயிகள் டெல்லியில் போராடியும் எந்த நியாயமும் கிடைக்கவில்லை. மேலும், பாஜகவை சேர்ந்தவரின் மகன் தனது வண்டியை ஏற்றி நான்கு விவசாயிகளைக் கொலை செய்துள்ளார். இதுதான் சாதாரண சாமானிய மக்களின் நிலை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது 13 பேர் கொலை செய்யப்பட்டார்கள்.
அவர்களுக்கும் இன்னும் நியாயம் நீதி கிடைக்கவில்லை. ஆட்சி வருவதற்கு முன்பு ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றினார். வேலைவாய்ப்பு போய்விடும் என்று கூறினர். ஆனால் ரூ.16,000 கோடி முதலீட்டில் அதைவிட ஒரு பெரிய நிறுவனத்தை கொண்டு வரப்பட உள்ளது.
இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிய திறன் இல்லாதவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி அளித்து, பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், தூத்துக்குடி, கோயில்பட்டி உள்ளிட்ட இடங்களில் டைடெல் பார்க் வர உள்ளது. மேலும், சிலருக்கு மகளிர் உரிமைத் தொகை விடுபட்டு இருக்கலாம், அவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் வழங்கப்படும்" என தெரிவித்தார்.
மேலும், குறுக்குசாலை பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய பாலம் அமைத்து தரப்படும் என்றும், கக்கரம்பட்டி கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் மற்றும் ரூ.500 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம், இன்னும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இவை எல்லாம் நிறைவேற டெல்லியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும், அதற்கு இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: விவசாயம் குறித்து ஒரே மேடையில் ஸ்டாலின் விவாதிக்கத் தயாரா? என எடப்பாடி பழனிசாமி சவால்!