மதுரை: மதுரை மாவட்டத்தின் வடக்கு தாலுகாவிற்குள் இருக்கும் பகுதிகள் அந்தணேரி, எஸ்.ஆலங்குளம், மகாகணபதிபுரம். இந்த பகுதிகளில் வசிக்கும் காட்டு நாயக்கர் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த 47 ஆண்டுகளாக வருவாய்த்துறை அதிகாரிகள் சாதிச் சான்றிதழ் வழங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால், காட்டு நாயக்கர் சமூகத்தில் இருக்கும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறுகின்றனர். குழந்தைகளின் அடிப்படை உரிமையான கல்வி மறுக்கப்படுவதால், அவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது எனவும், இதுகுறித்து மதுரை மாவட்ட நிர்வகாகத்திடம் பல முறை மனுக்கள் அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையே உள்ளது.
எனவே, அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கை கண்டிக்கும் வகையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் திருவள்ளுவர் சிலை முன்பு 200க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் மக்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுடன் அவர்களின் குலதெய்வ வழிபாட்டு முறைப்படி முகத்தில் கரும்புள்ளி குத்தி நூதன முறையாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். காட்டுநாயக்கர் சமூகத்திற்கு உடனடியாக சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கல்வி விருது விழாவில் விஜய் பேசிய அரசியல் என்ன?