சென்னை: நாடு முழுவதும் இன்று தீபாவளித் திருநாளை மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் மக்கள், தங்கிப் படிக்கும் மாணவர்கள், பணி புரியும் நபர்கள் என அனைவரும் நேற்று இரவு வரை தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துச் சென்றனர்.
அந்த வகையில், மக்கள் சிரமமின்றி செல்ல வசதியாக கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும், கடந்த 3 நாட்களாக சுமார் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. அதில், சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். மேலும், அதிக பயணிகள் வருகையால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப்பட்டிருந்தது.
பெரும்பாலான வழித்தடங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்பட்டாலும் செய்யாறு, வந்தவாசி, போளூர், செஞ்சி, சேத்துபட்டு, திருவண்ணாமலை ஆகிய மார்க்கத்தில் செல்லக்கூடிய பேருந்துகள், குறைவாகவே இயக்கப்பட்டதால் பயணிகள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றனர். மேலும், சில முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் தாமதமானதால் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், மற்றபடி பேருந்து நிலையத்தில் செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்ததாகவும், அதிக அளவில் கூட்டம் இருந்தாலும் அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளி 2024: 25 லட்ச தீபங்கள்; இரண்டு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்திய அயோத்தி!
இதுகுறித்து அம்பத்தூரைச் சேர்ந்த பயணி பிரான்சிஸ் கூறுகையில், "பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக உள்ளது. கூட்டம் அதிகமாக இருந்தாலும் உடனுக்குடன் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர். மாநகரப் பேருந்துகளும் அதிகப்படியாக இயக்கப்படுகின்றன. அதிகாரிகள் அனைவரும் முன்னின்று பேருந்துகள் இயக்கத்தினை கண்காணித்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த பயணி தேவி கூறுகையில், "தமிழ்நாடு அரசு சிறப்புப் பேருந்து சேவையை சரியாக இயக்கி வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளும் சுத்தமாக உள்ளது. பேருந்து எந்த நடைமேடையில் நிற்கும்? எத்தனை மணிக்குப் புறப்படும்? என அனைத்து அறிவுறுத்தல்களும் சரியாக அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். பேருந்து நிலைய நுழைவு வாயிலேயே பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால், அதைப் பார்த்து பயணிகள் சுலபமாக நடைமேடைகளுக்குச் செல்கின்றனர்" எனத் தெரிவித்தார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த பயணி நிஷாந்த் கூறுகையில், "தமிழ்நாடு அரசு கடந்த 3 நாட்களில் 14,000 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாகக் கூறுகின்றனர். ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதைவிட மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் குறைவாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காத்திருக்க வேண்டும் சூழ்நிலை உள்ளது. ஆகையால், இனிவரும் காலங்களில் பண்டிகை தினத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் நடப்பாண்டில் ஏதும் ஏற்படவில்லை, பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து வருகின்றனர் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்