சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, நேற்றிரவு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் கோவைக்கு புறப்பட்டது. இதில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் மது அருந்தி விட்டு ஏறியதாக கூறப்படுகிறது.
இவர்கள், ரயில் புறப்பட்டதில் இருந்து மது போதையில் ரயில் பெட்டியில் சத்தம் போட்டுக் கொண்டு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சத்தம் போட்டுக் கொண்டே தங்களுக்குள் மாறி, மாறி கத்திக்கொண்டே வந்ததால் ரயில் பயணிகள் தூங்க முடியாமல் அவதியுற்று வந்துள்ளனர்.
இது குறித்து துணை ராணுவப் படையினரிடம் பொதுமக்கள் அமைதியாக இருக்கும்படி கூறியதாகவும், தாங்கள் ராணுவ வீரர்கள் எங்களிடமே கேள்வி கேட்பீர்களா எனக் கூறி பயணிகள் இருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், மதுபோதையில் துணை ராணுவப்படையினருக்குள்ளே மோதல் ஏற்பட்டு அடித்துக் கொண்டதால் அப்பெட்டி முழுவதுமாக பதற்றத்துடன் இருந்துள்ளது.
ரயிலில் பயணித்த பொதுமக்களை தகாத வார்தைகளில் பேசியும், துப்பாக்கியை காட்டி மிரட்டியும் மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த அப்பெட்டியில் சென்ற பயணிகள், ரயில் ஜோலார்பேட்டை செல்லும் நேரத்தில் ரயிலில் உள்ள சங்கிலையை நிறுத்தி, ரயிலின் முன்பாக சென்று துணை ராணுவப்படையினரை ரயிலில் இருந்து கீழே இறக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜோலார்பேட்டையில் ரயில் நின்றவுடன் ரயில்வே பாதுகாப்பு படையினர், துணை ராணுவப் படையினரிடம் விசாரித்த போது, அவர்களையும் அவதுறாகப் பேசியதாக தெரிகிறது. துணை ராணுவப் படையினரை ரயிலில் இருந்து இறக்கிவிட்டால் மட்டுமே தாங்கள் ரயிலில் பயணிப்போம் என மற்ற பயணிகள் கூறியதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் துணை ராணுவப் படையினரை கீழே இறக்கிவிட்டனர். இதையடுத்து, மற்ற பயணிகளுடன் ரயில் புறப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதீனம் மிரட்டல் வழக்கு; பாஜக மாவட்ட தலைவர் ஜாமீனில் விடுவிப்பு! - Dharmapuram Adheenam Case