திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நீட் அகாடமியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் சிலரை அகாடமி உரிமையாளர் பிரம்பால் தாக்கியதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிமையாளர் மீது மேலப்பாளையம் போலீசார் சிறார் பாதுகாப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் தனியார் நீட் அகாடமிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மாணவிகள் தங்கி உள்ள விடுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் குழுவினரும் நேரடி விசாரணை நடத்தினர். அப்போது விடுதிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் தனியார் நீட் அகாடமி உரிமையாளர் கேரளாவுக்கு தப்பி சென்ற நிலையில், அவரைப் பிடிப்பதற்காக தனிப்படை கேரளாவில் முகாமிட்டுள்ளது. இந்த சூழலில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகள் முறையாக உரிமம் பெறவில்லை என சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால், அகாடமி நிர்வாகம் விடுதிகளை காலி செய்தது.
இதையும் படிங்க: மாணவர் விடுதியை காலி செய்த திருநெல்வேலி தனியார் நீட் அகாடமி நிர்வாகம் - காரணம் என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக தனியார் நீட் அகாடமியில் படிக்கும் இரண்டு மாணவர்களின் பெற்றோர்களான வினோதினி மற்றும் ஆமீனா நர்கீஸ் ஆகிய இருவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "என்னுடைய மகன் தனியார் நீட் அகாடமியில் பயிற்சிக்காக வேண்டி பயின்று வருகிறார். தனியார் அகாடமியில் என்னுடைய மகனை அடித்து கொடுமைப்படுத்தியதாக வீடியோ ஒன்று வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அகாடமியில் வேலை செய்த நபரான அமீர் ஹீசைன் என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டு என்னுடைய மகன் வாழ்க்கையில் கஷ்டத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.
இந்த அகாடமியில் இதுவரை 16 நபர்களுக்கு மேல் பயின்று தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். மேற்கண்ட அமீர் ஹீசைன் என்ற நபரோ அவருடைய சுயலாபத்திற்காக வேண்டி என்னுடைய மகன் வாழ்க்கையை வீணடிக்கும் வகையில் இந்த வேலையை செய்து விட்டார். ஆனால் என்னுடைய மகன் இன்று வரை அதே நீட் அகாடமியில் தொடர்ந்து பயின்று வருகிறார். இச்சம்பவம் நடந்தது எங்களுக்குத் தெரியும். இதில், எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. நீட் தேர்வு நெருங்கி வரும் இந்நிலையில் என்னுடைய மகன் இந்த அகாடமியில் நல்லபடியாக படிப்பைத் தொடர தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை ஈடிவி தமிழ்நாடு ஊடகம் சார்பில் பிரத்யேகமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "பொதுவாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து தான் ஆக வேண்டும்.
இந்த விவகாரத்திலும் குழந்தைகள் நலப் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தொடர்ந்து அவர்கள் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். தொடர்ந்து அதே அகடாமியில் மாணவர்கள் படிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே மாற்று ஏற்பாடுகளையும் அந்த அகாடமியின் உரிமையாளர் தான் செய்ய வேண்டும்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்