தஞ்சாவூர்: கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பயின்ற 18 குழந்தைகள் படுகாயமுற்றார்கள். 94 சின்னஞ்சிறு குழந்தைகள் தீக்கு இரையாகி பரிதாபமாக உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இச்சம்பத்தின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி சம்பவம் நடந்த பள்ளி முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர் சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, குழந்தைகளுக்கு பிரியமான பிஸ்கட், இனிப்பு வகைகள், பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் வைத்து கண்ணீர் மல்க அவர்களது திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 20 ஆண்டுகள் உருண்டோடினாலும், இதன் சோகமும், வடுவும் இன்னும் மாறவில்லை என பெற்றோர்களின் கண்களில் தெரிகிறது.
கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை க.அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஊர்வலமாக வந்து தீக்கு இரையான குழந்தைகளின் திருவுருவப்படத்திற்கு முன்பு, மலர் வளையம் வைத்தும், மலர் மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். எம்.எல்.ஏ சாக்கோட்டை க.அன்பழகன், பள்ளி முன்பு அஞ்சலி செலுத்த திரண்டு வந்திருந்த அனைவருக்கும், பிஸ்கெட் பாக்கெட்கள், குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார்.
தொடர்ந்து அதிமுகவினர் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையிலும், தேமுதிக சார்பில் கும்பகோணம் மாநகர் மாவட்ட செயலாளர் கோ சங்கர் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் தலைமையிலும், அமமுகவினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், இளைஞர் அரண் அமைப்பினர், இந்திய மாணவர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர், பொது மக்கள், தன்னார்வ அமைப்பினர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்கள் சம்பவம் நடந்த பள்ளியில் இருந்து மலர் வளையமுடன் ஊர்வலமாக புறப்பட்டு, பாலக்கரை பகுதியில் உள்ள நினைவிடத்தில், மலர் வளையம் வைத்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். இத்தீவிபத்தில் தனது இரு குழந்தைகளையும் பறி கொடுத்த இன்பராஜ் கூறுகையில், “2004 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். அதில் என்னுடைய இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.
அவர்களது இறந்து இத்துடன் 20 ஆண்டுகள் ஆகிறது. என்னுடைய குழந்தை உயிருடன் இருந்திருந்தால் இன்று 30 வயது ஆகிருக்கும். இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. இக்கொடூர சம்பவம் நிகழ்ந்த ஜூலை 16ஆம் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அரசு அறிவிக்க வேண்டும்.அது தான் பாதிக்கப்பட்ட பெற்றோர்களான எங்களது கோரிக்கை” என்று கூறினார்.
இதையும் படிங்க: தருமபுரி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்; பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 40 பேர் படுகாயம்! - dharmapuri bus accident