தஞ்சாவூர்: தமிழக அரசின் மாநில மரமாக கருதப்படும் பனை மிகுந்த பயன் கொண்டது. மண் அரிப்புகளைத் தடுக்கும் தன்மை கொண்டது. தன்னுடைய நீண்ட வேர்கள் வாயிலாக தண்ணீரைக் கொண்டு சென்று நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
பனைமரம் வெள்ளம் போன்ற கடும் மழைக் காலங்களில் ஆற்றங்கரையோரங்களில் சேதங்கள் ஏற்படாமல் நம்மை காக்கும் என்பதால், மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளைச் சுற்றி இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது.
இதனை கடந்த ஜூலை 27ஆம் தேதி மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளில், தமிழக சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.வீ.மெய்யநாதன், மாநிலம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார்.
இதற்காக மாநிலம் முழுவதும் 50 லட்சம் விதைகள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, கடந்த செப்.1ஆம் தேதி முதல் பனை விதைகள் நடும் பணி தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாயிலாக தொடங்கப்பட்டு சேலம், கரூர், திருச்சி மாவட்டத்தைக் கடந்து தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இக்குழு வந்துள்ளது.
அந்த வகையில், இன்று கும்பகோணம் பகுதியில் காவரிக் கரையோரம் உள்ளிட்ட 7 இடங்களில் 250 பனை விதைகள் நடும் பணி கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தொடங்கப்பட்டது. இதனை கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன் பனை விதையை நட்டு தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க : 'ஹெலிகாப்டர் சகோதரர்கள்' மோசடி விவகாரம்; பறிமுதல் சொத்துக்களை வழக்கில் இணைக்க உத்தரவு!
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சார் ஆட்சியர், "தமிழக அரசின் மாநில மரமாக உள்ள பனை கடும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் மண் அரிப்புகளில் இருந்து நம்மைக் காக்க கூடியது. நிலத்தடி நீர் மேம்பட உதவும் மரமாகும்.
நம் மாநிலத்தில் பெரும்பான்மையான பகுதி கடற்கரையை ஒட்டியுள்ளதாலும், நவம்பர் மாதம் வழக்கமாக நம் மாநிலத்தில் கடும் மழை, வெள்ளம் ஏற்படக்கூடிய காலமாக இருப்பதால் இத்தகைய பேரிடர்களில் இருந்து நம்மைக் காக்கும் வகையில் இந்த பனை விதைகள் நடும் பணி நடைபெறுகிறது" என தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான ஹரி கிருஷ்ணன் கூறும்போது, "இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல 20 லட்சம் தன்னார்வலர்கள் தங்களை தன்னெழுச்சியாக இதில் பங்கேற்க ஆர்வம் காட்டி பங்கேற்று வருகின்றனர். ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியில் தற்போது வரை சுமார் 20 லட்சம் விதைகள் நடப்பட்டுள்ளன.
அதில், இன்று வரை காவிரி கரையோரங்களில் மட்டும் 9 லட்சத்து 16 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டுள்ளது. இதற்காக உதவி என்ற பெயரில் பிரத்யேகமாக ஒரு செயலி உருவாக்கப்பட்டு, அதன் மூலம் ஒவ்வொருவரும் பனை விதைகளை நட்டு அதனை அந்த செயலி வழியில் பகிர்ந்து சுற்றுச்சுழல் அமைச்சரின் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற முடியும்" என்றார்.
தொடர்ந்து பேசிய மற்றொரு ஒருங்கிணைப்பாளரான ராஜவேல், "தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, இத்தகைய பனை விதைகளை மாநிலம் முழுவதும் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையிலும் நட வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சென்னை அருகேயுள்ள மாம்பாக்கத்தில் வரும் அக்டோபர் முதல் வாரம் தொடங்கி, 50 லட்சம் பனை விதைகள் நடும் பணி தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, ஸ்ரீபெரும்புதூர் என பல்வேறு இடங்களில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைகளில் பனை விதைகள் நடும் பணி தொடரும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்