சென்னை: பள்ளிக்கரணை மற்றும் சுற்றுப் பகுதியில் இரவு நேரத்தில் கடைகளின் ஷட்டர் பூட்டுகள் லாவகமாக உடைக்கப்பட்டு, கல்லாவில் உள்ள பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளை போவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கிடைத்த உருவத்துடன் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்தனர்.
அதன்படி, அந்த உருவம் பழைய குற்றவாளியான ஆவடி, காமராஜ் நகர், நந்தவன மேட்டூரைச் சேர்ந்த மன்மதன் (27) என தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் மன்மதனை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆவலூர்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மன்மதன், ஆவடியில் வாடகைக்கு வீடு எடுத்து சென்னையின் பல பகுதியில் கடை ஷட்டர் பூட்டுகளை உடைத்து திருடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், கடை ஷட்டர் பூட்டுகளை கள்ளச்சாவி போட்டு லாவகமாக திறப்பது குறித்து யூடியூப் பார்த்து கற்று கொண்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் மன்மதன் கூறினார்.
மன்மதன் மீது திருவள்ளூர், திருமுல்லைவாயில், ஆவடி, டேங்க் பேக்டரி, சேத்துப்பட்டு ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் உள்ளன. இதையடுத்து மன்மதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை.. நெல்சன் திட்டவட்டம்!