மதுரை: சுய உதவிக் குழுக்கள் உருவாக்கி அடித்தட்டுப் பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட களஞ்சிய இயக்கத்தின் தலைவியாக இருந்த பெ.சின்னப்பிள்ளைக்கு கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஸ்த்ரீசக்தி புரஸ்கார் மாதா ஜிஜா பாய் விருதினை அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வழங்கி கௌரவித்தார். அந்த விருது வழங்கும் நிகழ்வின் போது சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வாஜ்பாய் வணங்கியது அச்சமயம் தேசம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதற்குப் பிறகு அதே ஆண்டில் அதே மாதத்தில் மும்பையில் பஜாஜ் நிறுவனம் சின்னப்பிள்ளைக்கு பஜாஜ் ஜானகிதேவி புரஷ்கார் விருது வழங்கியது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக அப்போது இருந்த கருணாநிதி, பொங்கல் திருநாளில் பொற்கிழி வழங்கிப் பாராட்டினார். இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2018ஆம் ஆண்டு ஔவையார் விருது வழங்கி கௌரவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சின்னப்பிள்ளைக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி சிறப்புச் செய்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நேர்காணல் ஒன்றை சின்னப்பிள்ளை வழங்கினார்.
அதில் தனக்கென்று சொந்த வீடு எதுவும் இல்லை என்றும் இதனால் சமூக மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது எனவும் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்து இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன் பெயரில் பட்டா கொடுத்திருந்தும் கூட, வீடு கட்டித் தருவதற்கு மத்திய மாநில அரசுகள் முன்வராத வேதனையையும் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் சின்னப்பிள்ளையின் இந்த வேண்டுகோள் குறித்து ஈடிவி பாரத் ஊடகத்தில் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலமாக வீடு கட்டித் தரப்படும் எனவும் ஒரு சென்ட் நிலத்தோடு கூடுதலாக 380 சதுர அடி நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் உடனடியாக துவங்கும் என அறிவிப்புச் செய்தார்.
அன்றைய தினமே மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள திருவிழான்பட்டி கிராமத்தில் இருந்த சின்னப்பிள்ளைக்கான பட்டா நிலத்தில் நில தூய்மை பணிகள் தொடங்கின. அன்று தொடங்கி தற்போது வரை பணிகள் சிறப்புடன் நடைபெற்று, அந்த வீட்டிற்காக கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் மூலம் ரூ.3.50 லட்சம் தொகை மானியமாக வழங்கப்பட்டது.
முன்னறை, உள்ளறை, படுக்கையறை, நவீன வசதியுடன் கூடிய கழிவறை, சமையலறை, 24 மணி நேரமும் கூடிய தண்ணீர் வசதி என வீடு சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டைக் கட்டுவதற்கு சின்னப்பிள்ளை மற்றும் அவரது மகன்கள் சின்னத்தம்பி, கல்லுவடியான் ஆகியோர் கூடுதலாக பணம் போட்டு சுமார் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடித்து இன்று பால் காய்ச்சி புதுமனை புகுந்தனர்.
இதுகுறித்து பத்மஸ்ரீ பெ.சின்னப்பிள்ளை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில், "நீண்ட காலமாக நிறைவேறாமல் கிடந்த என்னுடைய கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. நான் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக இந்த வீடும் இந்த நிலமும் அமைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடனடியாக எனக்கு வீடு கட்டித்தர உத்தரவிட்டிருந்தார். இதற்கு காரணமாக இருந்த ஈடிவி பாரத் ஊடகத்திற்கும், தமிழக முதலமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த வீடு உருவாக்கத்தில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் என்னுடைய நன்றி என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து பேசிய சின்னப்பிள்ளையின் மூத்த மகன் சின்னத்தம்பி, அம்மாவுக்கு தேவையான அனைத்து வசதிகளோடு நானும் எனது தம்பி கல்லுவடியானும் சேர்ந்து இந்த வீட்டை கட்டிக் கொடுத்துள்ளோம்.
இதற்காக அதிகாரிகள் எங்களுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியமாக அளித்துள்ளனர். அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இதையும் படிங்க: காவிரியாற்றில் மூங்கி எழுந்த கும்பகோணம் உச்சிப்பிள்ளையார்! கோலாகலமான விநாயகர் சதுர்த்தி விழா! - Uchippillaiyar VINAYAGAR CHATHURTHI