சென்னை: மயிலாப்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் பிரச்சார உரையாற்றினார்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுக்கூட்ட மேடையில் பேசிய பா.சிதம்பரம், "இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. மத்திய அரசில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும். அப்படி நடக்காவிட்டால் அடுத்த தேர்தல் நடக்குமா என்பதே சந்தேகம்தான்.
ஐநா சபைக்குட்பட்ட நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி இந்தியாவில் வேலையின்மை என்பது இளைஞர் மத்தியில் எட்டிப் பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் வேலையின்மை 65 சதவீதம் உயர்ந்துள்ளது. பட்டதாரிகளில் 45% வேலையில்லாமல் உள்ளனர்.
மொத்தமாக இந்தியாவில் 85 சதவீத இளைஞர்களுக்கு வேலையில்லை. ஐஐடியில் படித்த மாணவர்களில் 30 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் நினைவில் நிற்கக்கூடிய திட்டம் என்பது எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் பயனுள்ள திட்டம் என்ற ஒரு திட்டம் கூட இதுவரை இல்லை.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் நாடு முழுவதும் சென்று சேரும். மதிய உணவுத் திட்டத்தின் மூலம் காமராஜருக்கு எவ்வாறு பெயர் கிடைத்ததோ அதேபோல் காலை உணவுத் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாடு முழுவதும் பெரிய பெயர் கிடைக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைக் கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது என்று யாராவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா சினிமாவில் கூட பார்த்ததில்லை ஏதாவது ஒரு நாவலிலும் கூட இப்படிப் பார்த்ததில்லை.
தேசத்தில் தடம் பதித்த காங்கிரஸ் கட்சியை ஒழித்து விட்டால் மாநிலக் கட்சிகளை ஒவ்வொன்றாக விளையாடித் தூக்கி எறிந்து விடலாம் என்று பாஜகவினர் நினைக்கின்றனர். தற்போது இந்தியா அழிவுப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கண் கட்டி வித்தை.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி ஒரே பிரதமர் என்ற நிலையில்தான் இது போய் முடியும். இந்த முறை ஜனநாயகத்தைக் காப்பாற்றாமல் விட்டால் அடுத்த முறை ஜனநாயகத்தைக் காப்பாற்ற வழி இருக்காது. ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக வாக்களியுங்கள்" என்று பேசினார்.