சென்னை: பிற மாநிலத்தில் பதிவு பெற்ற ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்கக் கூடாது என்ற போக்குவரத்து துறையின் உத்தரவையடுத்து, இன்று (ஜூன்.18) சென்னை கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகத்திற்குள் இயங்கும் ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் பதிவு செய்து இயக்குவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இங்கு உள்ள பிற மாநில பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து உடனடியாக மறுபதிவு செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு உரிமையாளர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழகத்தில் சாதாரணமாக ஒரு ஆம்னி பேருந்து பதிவு செய்வதற்கு ஒரு மாத காலம் ஆகிறது. இதனால் இதைச் சார்ந்துள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதோடு உரிமையாளர்களும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.
இங்கு உள்ள பிற மாநில பதிவு பெற்ற பேருந்துகள் இன்று முதல் தமிழகத்தில் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இதைச் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும். ஆகையால் போக்குவரத்து துறை சார்பாக இப்பேருந்துகளை உடனடியாக எடுத்து இயக்குவதற்கு ஏதுவாக உரிமம் மற்றும் பேருந்து பதிவை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: ஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல முன்பதிவு செய்யலாமா..? - பயணிகளுக்கு முக்கிய தகவல்! - omni bus issue