தேனி: தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தேக்கடியில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகை, தமிழக விவசாயிகளின் விவசாய நிலங்களுக்கும், குடிநீர் தேவைகளுக்கும் திறந்து விடுவது வழக்கம்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 15 அடிக்கு மேல் நிரம்பி வரும் தண்ணீரை மட்டும் தமிழகத்திற்கு கொண்டு செல்ல தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இந்த மதகானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட தமிழக அரசு நேற்று ஆணை வெளியிட்டது.
அதன்படி, இன்று காலை தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம், தேனி வட்டத்தில் உள்ள 2,412 ஏக்கர், உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர் என மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நன்செய் நிலங்களில் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இன்று முதல் 120 நாட்களுக்கு தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கன அடி வீதமும், விவசாய பாசன வசதிக்காக 200 கன அடி என மொத்தம் 300 கன அடி தண்ணீரை தேவைக்கேற்ப நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படுகிறது. முதல் போக சாகுபடிக்கான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இன்று முதல் நீர் திறக்கப்பட்டதால், தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சார்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தண்ணீர் திறந்து விடும் நிகழ்வுக்கு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் என யாரும் கலந்து கொள்ளவில்லை. தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் சிலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கோவையில் காட்டு யானைக்கு சிகிச்சை: தொடர் கண்காணிப்பில் வனத்துறை! - Sicked Wild Elephant Treatment