சென்னை: சென்னை மாவட்டம் கொரட்டூரைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி ஆன்லைன் டெலிவரி ஆப் மூலம் வீட்டிற்குத் தேவையான மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து, பகுதி நேரமாக டெலிவரி செய்து வரும் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பவித்ரன் (19) என்ற கல்லூரி மாணவர் இதனை டெலிவரி செய்துள்ளார்.
அப்போது செயலியில் பதிவிட்ட முகவரியும், வீட்டின் முகவரியும் வெவ்வேறாக இருந்ததால், பவித்ரன் நீண்ட நேரம் முகவரியைத் தேடியதாக பெண்ணிடம் கூறியதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், பொருட்களை டெலிவரி செய்துவிட்டு பவித்ரன் சென்றுள்ளார்.
இதனையடுத்து, ஆன்லைன் டெலிவரி செயலியில் பவித்ரன் மீது அப்பெண் புகார் அளித்ததாகவும், இதனால் பவித்ரன் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த பவித்ரன், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று, அவர் வீட்டு ஜன்னல் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளார். இதனால் கண்ணாடி துகள்கள் பட்டதில் அந்த பெண்ணின் ஐந்து வயது ஆண் குழந்தைக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உயிரே பட நடிகையின் தந்தை மரணம்! விபத்தா? கொலையா? நிலவும் மர்மம்!
மேலும், இச்சம்பவம் குறித்து அந்தப் பெண் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், கொரட்டூர் போலீசார் நேற்று முன்தினம் பவித்ரனை நேரில் அழைத்து விசாரித்தனர். அப்போது கல்லூரி மாணவர் என்பதால், பவித்ரனை எச்சரித்து, சிறிய வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் அபராதம் கட்ட அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் இரவு தற்கொலை கடிதம் எழுதி வைத்த பவித்ரன், வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார், பவித்ரன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து சென்னை கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.