சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறுபான்மை மொழி மாணவர்கள் தமிழ் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம் எனவும், ஹால்டிக்கெட்டுகளை பள்ளிகளில் 20ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இவர்களுக்கான அறிவியல் பாடச் செய்முறைத்தேர்வுகள் முடிவடைந்துள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களும் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பில் சிறுபான்மை மொழி பள்ளிகளில் படித்த மாணவர்கள் பொதுத்தேர்வில் தமிழ் மொழிப்பாடத்தை எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், “2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மொழி அல்லாத சிறுபான்மை மொழியினை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் பகுதி-1-இன் கீழ் கட்டாய தமிழ்மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்குக் கோரி விண்ணப்பித்தால்,அந்த மாணவர்களுக்கு மட்டும் அவர்களது கோரிக்கையினை ஏற்று ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதி 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு மட்டும் கட்டாய தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்களிக்கிறது.
மேலும், சிறுபான்மை தாய் மொழிப்பாடத்தினை பகுதி 1-இன் கீழ் தேர்வெழுத அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாணவர்களின் பெயர் பட்டியலில் பகுதி 1-ல் தேர்வெழுதவுள்ள சிறுபான்மை மொழிப் பாடத்தினை மார்ச் 14 முதல் மார்ச் 18 வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குப் பெயர் பட்டியலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் பெயர் பட்டியலில் திருத்தங்கள் (மாணவர் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பயிற்று மொழி, விருப்பப் பாடம்) இருப்பின் அதனையும் மேற்கொள்ளலாம்” என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் மார்ச் 15ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்பதை மாற்றி 20ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜாபர் சாதிக் வழக்கை கையில் எடுக்கிறதா டெல்லி என்ஐஏ?.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?