மதுரை: மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு, மதுரை மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
தனித்துவமான மணம், தன்மை காரணமாக மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிற மாவட்டங்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியாவிற்கும் மதுரை மல்லிகை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மதுரைக்கு வருகை தருகின்ற பல்வேறு வெளிநாட்டவர்களும், மதுரை மல்லிகையை விரும்பி சூடிக் கொள்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஒரு கிலோ மல்லிகை ரூ.700க்கும், அதிகபட்சமாக ரூ.800க்கும் விற்பனையாகி வந்த நிலையில் இன்று திடீரென ஒரு கிலோ ரூ.1,500க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், "மல்லிகையின் வரத்து பெருமளவு குறைந்துள்ளதால் இந்த திடீர் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 9ஆம் தேதி முகூர்த்த நாள் அன்று கூட இந்த அளவுக்கு விலை ஏறவில்லை.
மதுரையில் இருந்து மல்லிகை அதிக அளவில் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த திடீர் விலை ஏற்றம் என எண்ணுகிறோம். பிற அனைத்து பூக்களின் விலை இயல்பாக உள்ளது. தொடர்ந்து மல்லிகை பூவை பொறுத்தவரை இதே வரத்து நீடிக்குமானால் விலை நிலவரமும், இதே போன்று தான் தொடரும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மீதமுள்ள இரண்டாண்டு ஆட்சியில் நிச்சயம் சாதிவாரி கணக்கெடுப்பு"- தவெக தலைவர் வேல்முருகன் நம்பிக்கை! - TVK VELMURUGAN