சென்னை: மாங்காடு பகுதியில் பட்டியல் போட்டு வீடுகளில் திருடி வந்த மூதாட்சியை பொதுமக்கள் பிடித்து மாங்காடு போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாங்காடு, காமாட்சி அம்மன் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பெண்ணின் வீட்டுக்குள் மூதாட்டி ஒருவர் சர்வ சாதாரணமாக நுழைந்துள்ளார். இந்நிலையில், வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அந்த வீட்டின் பெண்மணி மூதாட்டி ஒருவர் வீட்டுக்குள் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து, இதுகுறித்து மூதாட்டியிடம் கேட்டபோது தான் வீடு மாறி வந்ததாக கூறியுள்ளார். ஆனால், மூதாட்டி பதட்டத்துடன் வேகவேகமாக அங்கிருந்து சென்றதால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மூதாட்டியை மடக்கி பிடித்துள்ளார். ஆனால், மூதாட்டி அந்த பெண்ணை கீழை தள்ளிவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளாா். இதையடுத்து, அப்பெண் கூச்சல் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் மூதாட்டியை மடக்கி மடக்கிப் பிடித்துள்ளனர்.
தொடர்ந்து அவரை சோதனை செய்ததில், குறிப்பிட்ட வீட்டில் இருந்து 4 பவுன் தங்க நகை மற்றும் சில்லறை காசுகளை அவர் தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மூதாட்டி கையில் வைத்திருந்த வேத புத்தகத்தில் மாங்காடு பகுதியில் யார் யார் வீடுகளில் திருட வேண்டும் என்ற பட்டியல் முகவரியுடன் இருப்பதைக்கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாங்காடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாங்காடு போலீசார் மூதாட்டியிடம் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் உரிமையாளா்கள் இருக்கும்போதே வீடுகளில் புகுந்து நகையை திருடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வர முடியாமல் இருந்ததால், அருகில் உள்ள வீட்டு பெண்ணை கதவை திறக்க சொல்லி அங்கிருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து இந்த பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இந்த மூதாட்டியின் பின்னணியில் வேறு யாரெல்லாம் உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மூதாட்டியை பிடித்த பெண் கூறுகையில், “நான் வீட்டில் இருக்கும்போதெ எங்கள் வீட்டில் புகுந்து நகையை கொள்ளை அடித்து தப்பிக்க முயன்ற நிலையில் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து சோதித்ததில் அவர் 4 சவரன் நகையை கொள்ளை அடித்துள்ளது தெரியவந்தது. இதனால் அவரை மாங்காடு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சிக்கிம் ராணுவ வாகன விபத்தில் விருதுநகரை சேர்ந்த சுபேதார் தங்கபாண்டி உட்பட 4 பேர் மரணம்