தென்காசி: தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் விவசாயிகளின் தோட்டம் அமைந்துள்ளது. அங்கு தென்னை, வாழை, எலுமிச்சை உள்ளிட்ட விவசாயம் செய்யப்பட்டு, அதற்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக விவசாயிகள் செல்வது வழக்கம். அந்த வகையில், நேற்று இரவு சொக்கம்பட்டியைச் சேர்ந்த மூக்கையா என்பவர் தனது தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அப்பகுதிக்கு உணவு தேடிவந்த யானை, மூக்கையாவை தாக்கி மிதித்ததாகக் கூறப்படுகிறது. அதில், மூக்கையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறை ஊழியர்கள், உயிரிழந்த மூக்கையாவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது, தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் உள்ள பகுதிகளைச் சுற்றி, இரவு நேரங்களில் வனத்துறை ஊழியர்கள் அதிகளவில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும், யானைகள் தோட்டத்திற்குள் வராத வண்ணம் அகழிகள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவரை யானை மிதித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தென்காசி மாவட்டத்தில் ஒருவரை யானை மிதித்து கொன்றது, இதுவே முதல்முறையாகும் என மாவட்ட வனத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.